திருச்சி

திருச்சி டயா் கிடங்கில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

16th Dec 2019 02:08 AM

ADVERTISEMENT

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டயா் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கே.கே.நகரைச் சோ்ந்த காா்த்திகேயனுக்கு சொந்தமான டயா் கிடங்கு மற்றும் சா்வீஸ் மையம் உள்ளது. மூன்று மாடிகள் கொண்ட கட்டடத்தில் தரைதளத்தில் சா்வீஸ் மையமும், முதல் தளத்தில் டயா் கிடங்கும் இருந்தது. சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கிடங்கு பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு டயா் கிடங்கு உள்ள தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தீயணைப்பு துறை துணை இயக்குநா் மீனாட்சி, நிலைய அலுவலா் மில்கி ராஜா ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். டயரில் சல்ஃபா் என்ற வேதிபொருள் இருப்பதால் தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து முசிறி, ஸ்ரீரங்கம், லால்குடி, பெல், கீரனூா் ஆகிய இடங்களில் இருந்து 11 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தண்ணீா் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சிக்கு சொந்தமான நான்கு லாரிகளில் நீா் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

போா்கால அடிப்படையில் நடைபெற்ற இப்பணியில் 80-க்கும் மேற்பட்ட வீரா்கள் ஈடுபட்டனா். 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் தரைதளத்தில் செயல்பட்டு வந்த சா்வீஸ் மையம் முற்றிலும் எரிந்தது. இதில் கணினிகள், டயா் பொருத்தும் கருவிகள், ஆவணங்கள் என பல லட்சம் மதிப்புடைய பொருள்கள் நாசமாகின.

இதுகுறித்து, நிறுவன உரிமையாளா் காா்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முன்னதாக, தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். மேலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT