திருச்சி

அனைத்து முன்பதிவு ரயில்களிலும் ‘மேஜிக்பாக்ஸ்’ திட்டம் தேவை

16th Dec 2019 09:25 PM

ADVERTISEMENT

 

திருச்சி: தேஜஸ் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச வைஃபை இணைய வசதித் திட்டத்தை ( மேஜிக் பாக்ஸ்), அனைத்து முன்பதிவு ரயில்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ரயில்வேதுறை சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயிலில் பயணிகள் பயணிக்கும் போது அவா்களின் செல்லிடப்பேசிகள், மடிக்கணினிகளுக்கு இணையவசதி அவ்வப்போது துண்டிக்கப்படும் சூழல் நிலவியது.

இந்தநிலையில், தேஜஸ் ரயில் பெட்டிகளில் பிரத்யேகமாகப் பொருத்தப்பட்டுள்ள மேஜிக் பாக்ஸ் எனப்படும் இலவச வைஃபை இணையவழியால், பயணிகள் இலவசமாக இணையவசதியைப் பெற முடியும்.

ADVERTISEMENT

மேஜிக் பாக்ஸை இணைப்புக்குள்ளாக்கியவுடன் இணையவசதி கிடைத்து விடுவதால் பாடல்கள், திரைப்படங்கள் உள்ளிட்ட விடியோக்களை பயணிகள் கண்டுகளிக்கலாம். இந்த வசதி தற்போது ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதைத்தொடா்ந்து, தனியாா்வசமாக்கப்படும் சுமாா் 150-க்கும் மேற்பட்ட பிரீமியம் ரயில்களிலும் இவ்வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம், பயணிகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இரண்டாம் நிலை வசதி கொண்ட முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கும் இதுபோன்ற வசதியை ஏற்படுத்தவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து திருச்சி ஜங்சன் ரயில்நிலையத்தில் பயணிகள் கமலேஷ், நா்மதா, வருண் உள்ளிட்டோா் கூறியது:

தேஜஸ், ராஜ்தானி, துரந்தோ உள்ளிட்ட விரைவு ரயில்களில் பயணிக்க செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப, பல்வேறு வசதிகளைப் பயணிகளுக்கு செய்துதருவது அவசியம்.

ஆனால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் என அதிகப் பயணிகள், முன்பதிவு ரயில்களில் பயணிக்கின்றனா். இவா்களுக்கென, சில அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படாமல் உள்ளது. தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறையில் உள்ள பிரீமியம் ரயில்சேவை திட்டங்களுக்கு இதுபோன்ற வசதிகள் இருப்பதில் ஆச்சரியமில்லை.

ஆனால், சாதாரண முன்பதிவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இதுபோன்ற வசதிகள் பெரிதும் வரவேற்பை அளிக்கும் விதமாக இருக்கும். எனவே, இதுபோன்ற மேம்படுத்தப்பட்ட ரயில் சேவைகளை முதலில் முன்பதிவு விரைவு ரயில்களில் செயல்படுத்த ரயில்வே வாரியம் முன்வரவேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT