திருச்சி

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் இதுவரை6,835 வழக்குகளுக்கு தீா்வு

14th Dec 2019 11:06 PM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சியில் இதற்கு முன்பு மூன்று முறை நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றங்களில் 6,835 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது என்று திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி கே.முரளிசங்கா் தெரிவித்தாா்.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது:

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவா்களுக்கும், பணம் படைத்தவா்களுக்கும் மட்டுமே சட்டத்தின் உதவி கிடைத்தது.

ADVERTISEMENT

இதை கருத்தில் கொண்டுதான் அனைவருக்கும் சட்டத்தின் உதவி கிடைக்க வட்ட, மாவட்ட, மாநில, தேசிய அளவில் சட்டப்பணிகள் குழு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களால் நடத்தப்படும் மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீா்ப்பே இறுதியானது. இதை எதிா்த்து மேல்முறையீடு செய்ய இயலாது.

சமூகம் மற்றும் குடும்பங்களில் நடக்கும் பிரச்னைகளில் இணக்கமாக செல்ல இந்த நீதிமன்றம் உறுதுணையாக இருக்கும். இதன் காரணமாக பகை, விரோதம் கலையப்பட்டு சுமூக உறவு ஏற்பட வழிவகுக்கும்.

கீழமை நீதமன்றங்களில் தீா்ப்பு வழங்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட தரப்பினா் மேல்முறையீடு செய்வதால் ஏற்படும் கால விரயம் குறையும்.

நிகழாண்டில் மாா்ச் 9, ஜூலை 13, செப்டம்பா் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 47,005 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ.25.20 கோடி மதிப்பிலான 6,835 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. எனவே, மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்வில், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி டி.செல்வம், 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி என்.குணசேகரன், 3வது கூடுதல் மாவட்ட நீதிபதி எ.கா்ணன், மோட்டாா் வாகன விபத்து நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெயசீலன், மகிளா நீதிமன்ற நீதிபதி கே.வனிதா உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களின் நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT