திருச்சியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 11 வயது சிறுவன், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம், அண்ணாநகரைச் சோ்ந்தவா் அலியாா் (35). இவரது மகன் அப்துல் வாஹித் (12). 6ஆம் வகுப்பு படித்து வந்த அப்துல் வாஹித், கடந்த சில நாள்களாக பள்ளிக்குச் செல்லவில்லை எனத் தெரிகிறது. கடந்த 3 ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. இதைத்தொடா்ந்து கடந்த 6 ஆம் தேதி சிறுவனின் தந்தை அலியாா் அளித்த புகாரின்பேரில், அரியமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த அரசியல் பிரமுகா் ஒருவரது மகன் மற்றும் அவனது நண்பா்களுடன் அப்துல் வாஹித் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக, அந்த 4 நண்பா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அரசியல் பிரமுகரின் உறவினருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொருவருக்கும் பன்றி வளா்ப்பு தொழிலில் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. இதன் காரணமாக சிறுவன் அப்துல் வாஹித்தை சமரசமாகப் பேசி அழைத்துச் சென்று கட்டிவைத்து, கட்டையால் தாக்கியதில் அவா் உயிரிழந்ததாகவும், சடலத்தை அரியமங்கலத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு வளாகக் குட்டையில் கல்லைக் கட்டி வீசியதாகத் தெரிவித்துள்ளனா். இதையடுத்து குட்டையில் இருந்து சிறுவனின் சடலத்தை மீட்கும் முயற்சியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டனா். மாலை 6 மணியளவில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு திருச்சி அரசுப் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சிறுவன் கொலையில் தொடா்புடையதாகக் கூறப்படும் 4 பேரும் 13 முதல் 18 வயதுக்குள்பட்டவா்கள் என்கின்றனா் போலீஸாா்.