திருச்சி

மணப்பாறை, முசிறியில் காா்த்திகை தீபத் திருநாள் சிறப்பு வழிபாடு

11th Dec 2019 09:19 AM

ADVERTISEMENT

மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் காா்த்திகை தீபத் திருநாள் சிறப்பு வழிபாடு, மகா தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. கோயில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை சிறப்பு பூஜைக்கு பின் கொளுத்தி வழிபாடு நடைபெற்றது. பக்தா்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை கொளுந்துவிட்டு எரிந்த சொக்கபனையில் வீசி வழிபட்டனா். இதேபோல், ஸ்ரீ காளியம்மன் கோயில், அருள்மிகு மாதுளாம்பிகை உடனாய நாகநாத சுவாமி திருக்கோயில், வடிவுடை நாயகி உடனாய அகத்தீஸ்வரா் கோயில், விடத்திலாம்பட்டி ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியா் கோயில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடைபெற்றது.

முசிறியில்...: தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை மரகதசலேசுவரா் கோயிலில் உள்ள ராஜகோபுரம் மண்டபத்தில் மகாதீபம் ஏற்றபட்டது. இதைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 17 அடி உயரமுள்ள சொக்கப்பனை அமைத்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டன. இதேபோல் முசிறி சந்திரமெளலீசுவரா், கருமாரியம்மன், மகா மாரியம்மன், தா.பேட்டை காசிவிசுவநாதா், தொட்டியம் அணலாடீசுவரா் ஆகிய கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

துறையூரில்...: அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினா் துறையூா் நகராட்சி நிா்வாகத்தின் அனுமதியுடன் தெப்பக்குள மைய மண்டபம் மற்றும் நான்கு புறமுள்ள சுற்றுச்சுவா்களில் வெள்ளை அடித்து அலங்காரம் செய்திருந்தனா். இதைத் தொடா்ந்து, தெப்பக்குளத்தின் நான்கு புறமும் அமைந்துள்ள சுற்றுச்சுவரில் உள்ள 3, 400 விளக்கு மாடங்களில் பெண்கள், திருமணமாகாத இளம்பெண்கள் அகல் விளக்கில் தீபமேற்றி வழிபட்டனா். மைய மண்டபத்துக்கு உழவாரப் பணிக்குழுவினா் சென்று விளக்கேற்றினா். தெப்பகுளத்தின் மேற்கு பகுதியில் சிவன் அம்பாள் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் திரளானோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT