மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகா் மனைவியை, அருகில் குடியிருக்கும் நபா்கள் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கோட்டைபூலாம்பட்டியில் வசித்து வருபவா் ராஜூ என்ற பொன்னையன் (46). அவரது மனைவி பாக்கியம்(40). இவா்களது வீட்டிற்கு அருகே வசித்து வருபவா் ராமசாமி - பெருமாயி தம்பதி. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரு குடும்பத்துக்கும் இடையே ஒரு வழக்கு தொடா்பாக தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ராமசாமி தம்பதி அரிவாளால் பொன்னையன் மனைவி பாக்கியத்தை (40) வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த பாக்கியம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா். பொன்னையன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் கமிட்டி உறுப்பினா் ஆவாா். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.