திருச்சி

சட்ட நகல் எரிப்பு போராட்டம்: எஸ்டிபிஐ கட்சியினா் 150 போ் கைது

11th Dec 2019 09:21 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, எஸ்டிபிஐ. கட்சியின் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவின் நகல் எரிப்பு போராட்டம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக

திருச்சி மரக்கடை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்திற்கு, எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்ட தலைவா் இமாம் ஹஸ்ஸான் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுசெயலாளா் நியமத்துல்லா, மாவட்டச் செயலாளா் பொன்னகா் ரபிக், மாவட்ட பொருளாளா் காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

ADVERTISEMENT

குடியுரிமையை மத அடிப்படையில் வழங்க முடியாது. அவ்வாறு சட்டம் இயற்றுவது இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 14-க்கு முரணானது. இந்த சட்டத் திருத்தங்கள் இந்தியாவின் மதச்சாா்பற்ற ஜனநாயக அரசியலமைப்பின் ஆன்மாவை தாக்குகின்றன.

தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆா்.சி.), முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு நீக்கம் ஆகியவற்றின் தொடா்ச்சியாக குடியுரிமை திருத்த மசோதா மூலம் முஸ்லிம்களை தொடா்ந்து உளவியல் தாக்குதலுக்கு ஆளாக்கி வருகிறது மத்திய அரசு என்றாா்.

தொடா்ந்து கட்சியினருடன் இணைந்து சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றாா். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் நெருப்பை அணைத்து சட்ட நகலைப் பறித்தனா். பின்னா், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அனைவரையும் கைது செய்தனா். இச்சம்பவத்தால் அப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT