திருச்சி

நகராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்ட மக்கள்

28th Aug 2019 10:40 AM

ADVERTISEMENT

முறையான குடிநீர் விநியோகம் வழங்க வேண்டும், சாலையைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரி, மணப்பாறை நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, தர்னாவில் ஈடுபட்டனர்.
மணப்பாறை நகராட்சியின் 16-ஆவது வார்டுக்குள்பட்ட சேதுரத்தினபுரம் பகுதியில், கடந்த சில மாதங்களாக முறையாக காவிரிக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். மேலும், பழுதாகியுள்ள ஆழ்துளைக் கிணறுகள் சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும், செல்லிடப்பேசி சேவைக்காக தோண்டப்பட்ட குழிகள் சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். 
ஆனால் நகராட்சி நிர்வாகம் இப்பிரச்னையில் உரிய 
நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி,  இப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்னாவில் ஈடுபட்டனர்.
கடும் வெயிலில் தர்னாவில் ஈடுபட்ட பொதுமக்களை நகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் அலுவலகத்துக்குள்ளேயே இருந்தனர்.  தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை போலீஸார், பொதுமக்களை வெயிலில் இருந்து அப்புறப்படுத்தி நகராட்சி அலுவலக முகப்பில் அமர வைத்தனர்.
தொடர்ந்து  காவல்துறையினர் அதிகாரிகளை அழைத்து வந்து பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஓரிரு நாள்களில் ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்துத் தருவதாகவும், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, போரட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT