திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காவிரியாற்றில் குளித்த போது, நீரில் மூழ்கிய கால்நடை மருத்துவர் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகிலுள்ள வாளநாயக்கன்பாளையம் இ.பி. காலனியைச் சேர்ந்த தமிழரசு மகன் குணசேகரன் (38). கால்நடை மருத்துவரான இவர், தனது நண்பர்களுடன் காட்டுப்புத்தூர் அருகிலுள்ள சீலைப்பிள்ளையார்புதூர் பகுதியில் காவிரியாற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது, குணசேகரன் திடீரென நீரில் மூழ்கினார். இதை கண்டு நண்பர்கள் சப்தமிட்டும் ,அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள், காவிரியாற்றில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும் திங்கள்கிழமைதான் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து காட்டுப்புத்தூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.