பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரை திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது ஆட்சியர் சு. சிவராசு, மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ந.ரவிச்சந்திரன் ஆகியோரைச் சந்தித்து, சட்டப்பேரவை உறுப்பினர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது: திருச்சி துவாக்குடி பகுதியிலுள்ள தேசியத் தொழில்நுட்பக் கழக வளாகத்தின் குடியிருப்புப் பகுதி வழியாக, பொதுமக்கள் கடந்த 50 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் சாலையை நிர்வாகம் மூட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே இந்த சாலையை மூடுவதற்குத் தடை விதித்து, பொதுமக்கள் பயன்படுத்த வழிவகுக்க வேண்டும்.
மேலும் அண்ணாநகர் முதல் தஞ்சை பிரதான சாலை வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும். அரியமங்கலம் பாலத்தின் இணைப்புச்சாலையில் உள்ள தெரு விளக்குகள் சீரமைக்கப்பட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், திமுக நிர்வாகிகள் பொன்னகர் ஜெரால்டு, இன்பா, லாசர், அருண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.