திருச்சி

திருச்சி மாநகர், புறநகர் பகுதியில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்: அமைச்சர்கள், ஆட்சியர் பங்கேற்பு

23rd Aug 2019 10:18 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரிலும், மாநகராட்சி 8 ஆவது வார்டிலும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் பேசியது :
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த ஆக. 19ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, கிராமத்திற்கே வந்து மனுக்களை பெற்று மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் மீது அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு தகுதியின் அடிப்படையில் 30 நாள்களுக்குள் தீர்வு காணப்படும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, வேளாண்மைத்துறை மற்றும் பிறதுறை சார்ந்த அலுவலர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று தீர்வு காண வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். 
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தலைமை வகித்தார். தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி,  மாவட்ட ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன், நகரப் பொறியாளர் அமுதவள்ளி, செயற்பொறியாளர் சிவபாதம்,  ஸ்ரீரங்கம் உதவி ஆணையர்  வைத்தியநாதன், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் சண்முகவேலன், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மு.சுப்ரமணியன், மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் எஸ்.வேதலெட்சுமி, எம். மருததுரை உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT