திருச்சி

பேருந்து வேகம் குறைவு: பயணிகள் சாலை மறியல்

16th Aug 2019 10:05 AM

ADVERTISEMENT

திருச்சியிலிருந்து சென்னை சென்ற குளிர்சாதன தனியார் விரைவுப் பேருந்து மிகவும் குறைந்த வேகத்தில் சென்றதால் பேருந்துப் பயணிகள் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு  குளிர்சாதன வசதியுடன் கூடிய தனியார் விரைவுப் பேருந்து 43 பயணிகளுடன் புறப்பட்டது. இந்தப் பேருந்து சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியான சுமார் 14 கி.மீ தொலைவைக் கடக்க சுமார் 2 மணி நேரம் ஆனதாம். பேருந்தின் குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் பேருந்தின் வேகம் சுமார் 30 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லவில்லையாம். 
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் சமயபுரம் நெ. 1 டோல்கேட் பேருந்து நிறுத்தத்தில் கூடுதலாகப் பயணிகளை ஏற்ற முற்பட்டபோது, பயணிகள் கீழே இறங்கி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசேகர், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், குளிர்சாதன இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் செல்ல ஒப்புக்கொண்டு  பயணிகள் அனைவரும் மீண்டும் அதே பேருந்தில் ஏறி பயணித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT