திருச்சி

சுதந்திர தின விழா கோலாகலம்: 65 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

16th Aug 2019 10:06 AM

ADVERTISEMENT

நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழா திருச்சியில் வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகள் 140 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில் 65 பயனாளிகளுக்கு ரூ. 30 லட்சத்து 51 ஆயிரத்து 558 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல, பல்வேறு துறைகளில் சார்பில் சிறப்பாக பணியாற்றிய 105 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் மற்றும் தங்கப்பதக்கம் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, 700-க்கும் மேற்ட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  விழாவில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் வரதராஜு, மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், துணை ஆணையர் நிஷா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், சார் - ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, காந்தி மார்கெட் பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆட்சியர் சு. சிவராசு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


மாநகராட்சியில்...
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஆணையர் ந. ரவிச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாநகராட்சியில் மாசற்ற முறையில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த 30 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், தலா ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார். 20 ஆண்டுகள் விபத்தின்றி பணிபுரிந்த 2 ஓட்டுநர்களுக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு துணை நின்ற குடியிருப்பு சங்கங்கள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
விழாவில், மாநகராட்சி பொறியாளர் ச. அமுதவள்ளி, செயற்பொறியாளர்கள் பி. சிவபாதம், பி. செல்வம், உதவி ஆணையர்கள் எம். தயாநிதி, எஸ். திருஞானம், சி. பிரபாகரன், எஸ். வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக, காந்தி மார்கெட்டில் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து, தேசியக் கொடியை ஆணையர் ந. ரவிச்சந்திரன் ஏற்றி வைத்தார்.

விமான நிலைய வளாகத்தில்...
திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், தேசியக்கொடியை  விமான நிலைய இயக்குநர் கே. குணசேகரன் ஏற்றி வைத்து  பேசியது: கடந்த 2018-19 நிதியாண்டில் திருச்சி விமான நிலையம், ரூ. 43.34 கோடி  நிகர லாபம் ஈட்டியுள்ளது. சரக்குப் போக்குவரத்து நிகழ் நிதியாண்டு 8,000 மெட்ரிக். டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகளவு வருவாய் ஈட்டும் விமான நிலையங்களில் திருச்சியும் இடம்பிடித்துள்ளது பெருமைக்குரியது என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மத்திய தொழிலக பாதுகாப்புப் படை துணை ஆணையர் சந்தோஷ் குமார், சுங்கத் துறை, தீயணைப்புத் துறை, குடியேற்றப் பிரிவு, சரக்கு போக்குவரத்து (கார்கோ) அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

ரயில்வே மைதானத்தில்...
திருச்சி ரயில்வே கோட்டத்தில் நிகழ் நிதியாண்டில் ஜூலை மாதம் வரை ரூ,. 10.47 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியைக் ஏற்றி வைத்து, ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்று அவர் பேசியது: 
திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட தஞ்சை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள், விருத்தாசலம் மற்றும் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் - காரைக்குடி,  பட்டுக்கோட்டை - திருவாரூர் ரயில்பாதை அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. காரைக்குடி பட்டுக்கோட்டை இடையே ஏற்கெனவே பணிகள் முடிந்து பயன்பாட்டில் உள்ளது. விழுப்புரம் - கடலூர் இடையே சரக்கு ரயில் போக்குவரத்தும் மின்மயமாக்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 4 மாத காலங்களில் திருச்சி கோட்டத்தில் ரூ. 10.47 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட 58.24 சதவிகிதம் அதிகமாகும். இதேபோல், சரக்கு போக்குவரத்தும் 4.07 மில்லியன் டன்கள் கையாளப்பட்டு கடந்தாண்டை விட 39 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். 
நிகழ்வில் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ரயில்வே பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

ADVERTISEMENT

பெல் வளாகத்தில்...
திருச்சி பெல் கைலாசபுரம் நகரியத்தின் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்பு படையினரது அணிவகுப்பு மரியாதையை பெல் திருச்சி (மின்னாலை குழாய்கள் பிரிவு), திருமயம் மற்றும் சென்னை பிரிவுகளின் செயல்  இயக்குநர் ஆர். பத்மநாபன் ஏற்றுக் கொண்டு  பேசியது: 
திருச்சி பெல் நிறுவனமானது அதிநவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் முன்னோடியாக விளங்குவதாகத் தெரிவித்தார்.  
9 ஆண்டுகளாக தொடர்ந்து பெருமைமிகு விஸ்வகர்மா தேசிய விருதுகளைப் பெற்று வருகிறது என்றார். விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
முன்னதாக அறிவாலயம் சிறப்பு பள்ளியில், பெல் திருச்சி வளாகத்தின் முதன்மைப் பெண்மணி பத்மாசினி பத்மநாபன், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அமைப்புகளில்...
திருச்சி நீதிமன்ற வளாகத்தில்... முதன்மை மாவட்ட நீதிபதி முரளி சங்கர் தேசியக் கொடியேற்றி வைத்தார். இதில், நீதிபதிகள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி நெடுஞ்சாலைத்துறை  அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் (கட்டுமான மற்றும் பராமரிப்பு) எஸ்.பழநி கொடியேற்றி வைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 
திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில்... அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயராணி தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின்னர் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  
விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றினார். நிகழ்வில் மாணவிகள் அனைவரும் சுதந்திர தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்: சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மருத்துவர் அப்துல்கபூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றினார். இதில் செயலர் மூர்த்தி, பொருளாளர் சபீர் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.  
திருச்சி ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் கீழப்புலிவார்டு சாலை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சுதந்திர தினவிழா நடைபெற்றது. நிகழ்விற்கு கீரின் கிறிஸ்டல் சோசியல் கமிட்டியின் பசுமை இயக்க முதன்மை ஆலோசகர் பொன்.குணசீலன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் முகமது இப்ராஹீம் முன்னிலை வகித்தார். பாரதி கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். திருச்சி மாவட்ட நுகர்வோர் அமைப்பின் தலைவர் மகேஸ்வரன் சிறப்புரையாற்றினார். 73 மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள் தொகுப்பு வழங்கப்பட்டது.  
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம்: மண்ணச்சநல்லூர் வட்டம், புரத்தாகுடியில் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற விழாவிற்கு அதன்  தலைவர் ஞானாபரணம் தேசியக் கொடியேற்றினார். 
தமிழ்நாடு வேதாரண்யம், உப்பு சத்தியாகிரக இயக்கம்: திருச்சியில் உள்ள அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் அருகேயுள்ள உப்புசத்தியாகிரக நினைவு ஸ்தூபி பகுதியில் நடைபெற்ற விழாவில் மாநிலத் தலைவர் ஆறுமுகம், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தமுமுகவினர் ரத்த தானம்
தமுமுக திருச்சி மாநகர் (தெற்கு) மாவட்டம் அரியமங்கலம் கிளை சார்பில், உயிர்த்துளி ரத்த வங்கியுடன் இணைந்து அப்பகுதி பள்ளிவாசலில் ரத்ததான முகாம் நடைபெற்றது . கிளைத் தலைவர் நியாஸ் தலைமையில் நடைபெற்ற ரத்த தான முகாமை மாநிலச் செயலர் முஹம்மது ரபீக் தொடக்கி வைத்தார். முகாமில், 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். முன்னதாக, தமுமுக திருச்சி மாநகர் (தெற்கு) மாவட்டத் தலைவர் ஷேக் அஹமது தலைமையில் ரஹ்மானியா புரம் , ஏர்போர்ட், செம்பட்டு , ஆழ்வார்தோப்பு, அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், தமுமுக மாநில செயலாளர் முஹம்மது ரபீக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் அரசு பொது மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் என்.கே. அமீர்தீன் தலைமை வகித்தார். இதில், 20-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT