திருச்சி

மரபணு மாற்ற விதைகள்: பாரதிய கிசான் சங்கம் புகார்

11th Aug 2019 04:27 AM

ADVERTISEMENT


தடை செய்யப்பட்ட மரபணு மாற்ற விதைகளை விவசாயிகளிடையே குறுக்கு வழியில் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சங்கத்தின் மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் வி. வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மரபணு மாற்ற பயிர் விதைகளின் விற்பனை மற்றும் விதைப் பெருக்கத்துக்கு தடை உள்ள நிலையில் பன்னாட்டு விதை நிறுவனங்கள் பல்வேறு பெயர்களில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகளிடையே விற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி மற்றும் கத்தரி சாகுபடியில் இத்தகைய விதைகளை விற்கின்றனர்.
இதனால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களும் பரவும் அபாயம் உள்ளது. இது சட்ட விரோதம். இதன் மூலம் விதைச் சான்று மற்றும் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும். இத்தகைய விதைகளை விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிளைபோசேட் என்னும் ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும். இத்தகைய ரசாயனம் கலந்த விதைகளை விற்கும் நிறுவனங்களை தடை செய்து வணிகச்சந்தையிலிருந்து வெளியேற்ற வேண்டும். மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும். 2017-18, 2018-19 இரண்டு பருவங்களிலும் செலுத்தப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் தொகைக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பட்டா மாறுதல், திருத்தம் கோரி விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக, தமிழக முதல்வர், பாரத பிரதமர் ஆகியோருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.
துவரங்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்...
மணப்பாறை ஆக. 10:  மரபணு மாற்றப்பட்ட விதைகள், தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி திருச்சி மாவட்டம்,  துவரங்குறிச்சி பேருந்து நிலையம் முன் பாரதிய கிசான் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கண்ணன், என்.ஆர்.என். ராஜா உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.பி. சின்னச்சாமி, சி. சின்னச்சாமி, முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அகில பாரத செயற்குழு உறுப்பினர் பெருமாள், மாநில அமைப்பாளர் கோபி, மாநில பொதுச்செயலர் பார்த்தசாரதி, கோட்டத் தலைவர் அன்பழகன், மாநில அலுவல் செயலர் சி.ஜி.ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதிக தடுப்பணைகள் கட்ட வேண்டும், நோய்களை உருவாக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தடை செய்ய வேண்டும்,  நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பெரியசாமி வரவேற்றார்.  பட்டத்துராஜா நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT