திருச்சி

தூய்மை இந்தியா இயக்கம் மக்கள் இயக்கமாக வேண்டும்

11th Aug 2019 04:28 AM

ADVERTISEMENT


தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சகத்தின் கள விளம்பர அலுவலர் கே. தேவி பத்மநாபன் தெரிவித்தார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் சுதந்திரப் போராட்டம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கள விளம்பர அலுவலர் கே. தேவி பத்மநாபன் பேசியது:
உயிரைக் கொடுத்தும், உதிரம் சிந்தியும் தியாகிகள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக் காப்பது நமது கடமை. மகாத்மா காந்தி பிறந்தநாள் வரும் அக். 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் திறந்தவெளி கழிப்பறை இல்லாத கிராமங்களையும், நகரங்களையும் உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இதற்காக மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் கழிப்பறை இல்லாத வீடுகளில் தனிநபர் கழிப்பறைகளை அரசே கட்டி வருகிறது. மேலும், தூய்மை இந்தியா இயக்கத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.  சுதந்திர தினத்தில் நாட்டுக்காகப் போராடிய வீரர்களேயும் இன்னுயிர் நீத்த தியாகிகளேயும் நினைவுக்கூர வேண்டும். சொந்த வரலாற்றை மறந்த சமூகம் முன்னேற முடியாது. இன்றைய இளைஞர்கள் நமது முன்னோர்களின் தியாகத்தை மதித்து நாட்டின் வளர்ச்சிக்காக தங்களால் முயன்ற வகையில் பணியாற்ற வேண்டும். அதற்கு திறன் வளர் கல்வி அவசியம் என்றார் அவர்.
கள விளம்பர உதவி அலுவலர் கே. ரவீந்திரன், கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் கார்த்திக், வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்புச் செயலர் தர்மராஜ், நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் தமிழரசு ஆகியோர் சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் அதன் பெருமைகள் குறித்து விளக்கினர். விழாவில், சுதந்திர தினம் குறித்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு  பரிசுகள் வழங்கப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT