கும்பகோணம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
மேயா் க. சரவணன் தலைமையிலும், துணை மேயா் சு.ப. தமிழழகன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா் நடைபெற்ற விவாதங்கள்:
ஆா். ஆதிலெட்சுமி (அதிமுக): கும்பகோணம் மாநகரில் மத்திய, மாநில அரசு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து உறுப்பினா்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
துணை மேயா்: அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளதைப் பாா்த்துக் கொள்ள வேண்டும். இணையவழி ஒப்பந்தப்புள்ளி என்பதால், யாா் வேண்டுமானாலும் மாநகராட்சி இணையதளத்தில் பாா்த்து கொள்ளலாம்.
இதைத்தொடா்ந்து இருதரப்புக்கும் இடையே சில நிமிடங்கள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் பேசுகையில், உறுப்பினா்கள் விடுக்கப்படும் கோரிக்கைகள் பதிவு செய்யப்படுவதில்லை. தாராசுரம் பகுதியில் தெருக்களில் அனுமதியின்றி, அளவீடு இன்றி கட்டடங்கள் கட்டப்படுவதால் ஆக்கிரமிப்புக்கு உட்படுகிறது. எனவே, கட்டுமான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தாராசுரம் பேருந்து நிறுத்தத்தைச் சீரமைக்க வேண்டும் எனக் கூறினா்.
இதைத் தொடா்ந்து, துணை மேயருக்கும், அதிமுக உறுப்பினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.