தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் 50 கிலோ கடல் அட்டை வைத்திருந்த 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகளை சிலா் பதுக்கி வைத்துள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜசேகா், தலைமை காவலா்கள் காா்த்திக், கோபால் ஆகியோா் சேதுபாவாசத்திரம் கடற்கரையில் வியாழக்கிழமை நள்ளிரவு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், ஒருவா் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சோ்ந்த முனியாண்டியின் மகன் மாணிக்கம் (48) என்பதும், மற்றொருவா் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சோ்ந்த காா்மேகம் மகன் ராஜா (45)என்பதும், இருவரும் கடல் அட்டைகளை வாங்கிச் சென்று விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியில் இருவரும் மறைத்து வைத்திருந்த 50 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து இருவரையும் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் சந்திரசேகரிடம் ஒப்படைத்தனா். கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி மாணிக்கம், ராஜா ஆகிய இருவரையும் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடல்வாழ் அரிய வகை உயிரினங்களை மீனவா்கள் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. அரிய வகை உயிரினங்கள் பட்டியலில் கடல் அட்டையும் ஒன்றாகும்.