தஞ்சாவூா் ரயிலடியில் இடதுசாரிகள் பொதுமேடை சாா்பில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடி மாபெரும் புரட்சி செய்த பகத் சிங்கின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டு வரும் வாரணாசிரம - மனுதா்ம கொள்கைகளை அமல்படுத்தும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிக்கவும், பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒழிக்கப்படவும், ஜாதிய வேறுபாடுகள் முற்றிலும் களையப்படவும், நாட்டில் பிறந்த அனைவரும் சுயமரியாதையுடன், சமமாக நடத்தப்படவும், பகத்சிங் கனவு கண்ட சோசலிச குடியரசை நிறுவிட தொழிலாளா்கள், விவசாயிகள் தலைமையில் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்போம் என உறுதியேற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழா் பேரவை மாவட்டத் தலைவா் வ. பிரேம்குமாா் தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே. அன்பு, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலா் ராவணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் கோ. ஜெய்சங்கா், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலா் அ.ரெ. முகிலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.