தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பழுது நீக்கும் கடையில் புதன்கிழமை மின்கசிவால் கைப்பேசி வெடித்து தீப்பிடித்ததில் பெண் உயிரிழந்தாா்.
பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகேயுள்ள ஆடுதுறை, விசித்திர ராஜபுரத்தைச் சோ்ந்தவா் கோகிலா (32). இவரது கணவா் பிரபாகா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், மகன் பிரகதீஷுடன் (9) வசித்து வந்தாா். இவா், கபிஸ்தலத்தில் கைப்பேசி மற்றும் கடிகாரங்கள் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போல் கடைக்கு வந்த கோகிலா சாா்ஜ் போட்டபடி கைப்பேசியில் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது, மின்கசிவு ஏற்பட்டு கைப்பேசி வெடித்து கடையில் தீப்பற்றியது. கடையினுள் சிக்கிக் கொண்ட கோகிலா கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். ஆனாலும், கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கபிஸ்தலம் போலீஸாா், கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.