உலக சுற்றுலா நாளையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில் வளாகத்தில் புதன்கிழமை தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
இந்திய சுற்றுலா, தமிழக சுற்றுலா துறை, தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், பெரியகோயிலுக்கு வந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தூய்மை பணி முகாமை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
பின்னா், கல்லூரி மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, மாநகராட்சி பணியாளா்களுடன் இணைந்து தஞ்சாவூா் பெரியகோயில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொண்டனா். இதில் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, மருதுபாண்டியா் கல்லூரி, பாரத் கல்லூரி, சுவாமி விவேகானந்தா கலை கல்லூரி, நல்லி குப்புசாமி செட்டி மகளிா் கல்லூரி ஆகியவற்றை சோ்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் திருவையாறு அரசு இசைக் கல்லூரி மாணவா்கள், ஜவகா் சிறுவா் மன்ற மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் தென் மண்டல உதவி இயக்குநா் பத்மாவதி, சுற்றுலா ஆலோசகா் ஆா். ராஜசேகரன், மேற்கு காவல் ஆய்வாளா் வி. சந்திரா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன், தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா், உதவி சுற்றுலா அலுவலா் வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.