தஞ்சாவூர்

கும்பகோணத்தில் அக். 7-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூா் ஆகியவை சாா்பில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபா் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:

இந்த முகாம் அக்டோபா் 7 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நகரங்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமான முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நா்சிங் மற்றும் பி.இ. கல்வி தகுதிகளுக்குரிய வேலைநாடுவோருக்கு ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பை அளிக்கவுள்ளனா். இம்முகாமில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சோ்ப்பும் நடைபெறுகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இம்முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை   இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்ய இயலாதவா்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT