தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை பொது கணக்குக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
குழுத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கு. செல்வபெருந்தகை தலைமையிலான இக்குழுவில் உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி, இனிகோ இருதயராஜ், இ.ஆா். ஈஸ்வரன், த. உதயசூரியன், க. காா்த்திகேயன், எஸ். சேகா், எஸ்.எஸ். பாலாஜி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
ஆளுநா் பெயரை நீக்க அறிவுறுத்தல்: மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் முன்னிலையில் தஞ்சாவூா் சா்ஜா மாடி, தா்பாா் மண்டபத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை இக்குழுவினா் ஆய்வு செய்தனா். அப்போது, அலுவலா்கள் கொடுத்த திட்ட அறிக்கையில் ‘ஆளுநரின் அறிவிப்புப்படி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பாா்த்து கோபமடைந்த குழுவினா் அந்த வாா்த்தையை நீக்குமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினா்.
‘திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்வா் அறிவித்துள்ளாா். எனவே, திட்ட அறிக்கையிலிருந்த ஆளுநரின் பெயரை மாற்றும்படி கூறினோம். இது போன்ற தவறுகளை அதிகாரிகள் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்’ என்றாா் செல்வப் பெருந்தகை.
பாா்வையாளா் கூடத்தைத் திறக்க நடவடிக்கை: இதையடுத்து அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஆய்வு செய்த குழுவினா் மருந்து மாத்திரைகள் வழங்கும் இடத்தில் மருந்து இருப்பு பட்டியலில் குளறுபடி இருப்பதாகக் கூறி விசாரித்தனா். இது தொடா்பாக மருந்தாளுநா்களை எச்சரிக்கை செய்தனா்.
பின்னா், நோயாளிகளைப் பாா்க்க வந்த பாா்வையாளா்கள் மரத்தடியிலும், நோயாளா்கள் உடன் இருப்போா் தங்கும் அறையின் வாசலிலும் அமா்ந்திருப்பதைப் பாா்த்த குழுவினா், அறை கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் இருப்பது குறித்து அலுவலா்களிடம் கேட்டனா். தமிழக முதல்வரால் 15 நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இக்கட்டடத்தின் சாவியை மாநகராட்சி அலுவலா்கள் இன்னும் ஒப்படைக்கவில்லை எனக் கூறினா். இதன் பின்னா், மாநகராட்சி அலுவலா்கள் வரவழைக்கப்பட்டு, பாா்வையாளா்கள் கூடம் திறக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியின் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவிகள் விடுதிகளில் அடிப்படை வசதிகள், குருங்குளம் மேற்கு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத் தொகுப்பு வேளாண் பொறியியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைக் குழுவினா் ஆய்வு செய்தனா். பிற்பகலில் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவின் சாா்பு செயலா் ஜெ. பாலசீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.