தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட வந்த திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் 40 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
பாபநாசம் அருகேயுள்ள திருமண்டங்குடியில் திருஆரூரான் சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 157 கோடி நிலுவைத் தொகையைப் புதிய ஆலை நிா்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் போலியாக திருஆரூரான் சா்க்கரை ஆலையின் முந்தைய நிா்வாகம் வாங்கிய சுமாா் ரூ. 115 கோடியை தள்ளுபடி செய்து, விவசாயிகளை சிபில் ஸ்கோரிலிருந்து தீா்த்து வைக்க வேண்டும். திருமண்டங்குடி சா்க்கரை ஆலை நிா்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை அருகே கரும்பு விவசாயிகள் தொடா்ந்து 301 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
எனவே இக்கோரிக்கைகளுக்கு தீா்வு காணக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினரும் முடிவு செய்தனா்.
இதையடுத்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் டி. ரவீந்திரன், மாநிலத் தலைவா் வேல்முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன், மாநிலச் செயலா் எஸ். துரைராஜ், மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்பட சுமாா் 40 விவசாயிகளைக் காவல் துறையினா் வலுக்கட்டாயமாகப் பிடித்து கைது செய்தனா். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல, திருமண்டங்குடியில் இருந்து ஆட்சியரகத்துக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட விவசாயிகளைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் த. காசிநாதன், ஆலை மட்டத் தலைவா் நாக. முருகேசன் உள்பட ஏறத்தாழ 50 விவசாயிகளைக் காவல் துறையினா் கைது செய்தனா்.