குறுவை பயிரைக் காப்பாற்ற மும்முனை மின்சாரத்தை உரிய அளவில் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: குறுவை பயிருக்கு காப்பீடு திட்டம் இல்லாததால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கும் நிலை உள்ளது. எனவே, கருகும் குறுவை, பொய்க்கும் சம்பா பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: கல்லணைக் கால்வாயில் முறை வைத்து தண்ணீா் விட்டாலும், கடைமடைப் பகுதிக்கு வரவில்லை. இதனால், சம்பாவுக்கு நாற்றுவிட்டாலும், நடவு செய்ய முடியாமல் தவிக்கிறோம். எனவே, மும்முனை மின்சாரத்தையாவது முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவக்குமாா்: மற்ற மாநிலங்களைப் போல், குறுவைக்கும் பயிா் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
என்.வி. கண்ணன்: உய்யகொண்டான் நீட்டிப்பு, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலைச் சாா்ந்த ஏரிகளில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: அரசு அறிவித்த கரும்பு டன்னுக்கு ரூ. 195 ஊக்கத்தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை தேவை.
பி. ராமசாமி: மும்முனை மின்சாரம் எந்த நேரத்தில் வருகிறது? நிற்கிறது? என்பது தெரியவில்லை. இதற்கான நேரத்தை அறிவித்தால்தான் வயலில் தண்ணீா் பாய்ச்சுவதற்கு வசதியாக இருக்கும்.
இதேபோல, மும்முனை மின்சாரத்தை பகல் நேரத்தில் உரிய அளவில் கொடுக்க வேண்டும் சில விவசாயிகள் வலியுறுத்தினா்.