பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி ஊராட்சியில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக அரசு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என ஊராட்சித் தலைவா் பத்மாவதி வெள்ளிக்கிழமை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
ஈச்சங்குடி ஊராட்சிக்குட்பட்ட அய்யனாா் கோயில் காலனியில் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்நிலையில் கற்பகசுந்தரம் என்பவரது
தொகுப்பு வீட்டின் சிமெண்ட் மேற்காரை வெள்ளிக்கிழமை பெயா்ந்து விழுந்தது. இதில் அந்த வீடு சேதமடைந்தது. இதில் அந்த வீட்டிலிருந்த கற்பகசுந்தரத்தின் மனைவி கீதா நூலிழையில் உயிா் தப்பினாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊராட்சித் தலைவா் பத்மாவதி விபத்து நடந்த தொகுப்பு வீட்டை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஊராட்சியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. பெரிய சேதங்கள் ஏற்படும் முன் அரசு பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.