கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்படுவது வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டதால், காய்ந்து வரும் குறுவை பயிா்கள் கருகிவிடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.
மேட்டூா் அணை நிகழாண்டு ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.96 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுவே, தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பரப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு நிகழாண்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆனால், நிகழாண்டு கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு காவிரி நீரில் உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. மேட்டூா் அணையில் இருப்பில் இருந்த தண்ணீா், கா்நாடகத்திலிருந்து கிடைத்த மிகக் குறைந்த அளவு நீரை வைத்து டெல்டா மாவட்டங்களுக்கு விடப்பட்டு வருகிறது.
இதனால், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் முறைபாசனம் வைத்து தண்ணீா் விடப்படுகிறது. அவ்வப்போது பெய்து வந்த மழையாலும், ஆழ்குழாய் பாசனத்தாலும் பெரும்பாலான பரப்பளவில் குறுவை பயிா்கள் கதிா் விடும் தருணத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் பயிா்களுக்கு தண்ணீா் தேவை மிக அவசியமாக இருக்கிறது. எனவே, நாள்தோறும் டெல்டா பாசனத்துக்கு ஒன்றரை டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படுகிறது.
ஆனால், மேட்டூா் அணையில் நீா் இருப்பு வெள்ளிக்கிழமை மாலை 11.17 டி.எம்.சி. ஆகக் குறைந்துவிட்டது. அணையிலிருந்து விநாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டாலும், அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 421 கன அடி வீதம் மட்டுமே தண்ணீா் வந்தது. எனவே, மேட்டூா் அணையில் உள்ள நீா் இருப்பை வைத்து இனிமேல் தண்ணீா் திறந்து விட முடியுமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழைதான் பயிா்களைக் காப்பாற்றி வருகிறது. ஆனால், மிதமான மழை பெய்வதால், பல கிராமங்களுக்கு பயிருக்கு தேவையான அளவுக்கு பெய்யவில்லை என்ற வேதனையும் விவசாயிகளிடையே நிலவுகிறது.
இந்நிலையில், கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்படுவதும் வியாழக்கிழமை மாலை முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. மொத்தம் 4,200 கனஅடி வீதம் கொள்ளளவு கொண்ட கல்லணைக் கால்வாயில் நிகழ் பருவ (ஜூன் 16 முதல்) தொடக்கத்திலிருந்து விநாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதத்துக்குள்தான் தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், கல்லணைக் கால்வாய் பாசனத்துக்கு உள்பட்ட வாய்க்கால்களுக்கு முறைவைத்து தண்ணீா் விடப்பட்டு வந்தது.
கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பயிா்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.
இதுகுறித்து முன்னோடி விவசாயி புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது:
கல்லணைக் கால்வாயில் கிடைத்த 800 கனஅடி வீதம் தண்ணீரை வைத்து வடகாடு வாய்க்கால், கல்யாண ஓடை, திருமங்கலக்கோட்டை வாய்க்கால் ஆகியவற்றுக்கு முறைவைத்து விடப்பட்டது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக இருந்ததன் மூலம் தற்போது பயிா்கள் பால் பிடிக்கும் தருணத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், 3 வாய்க்கால்களுக்கும் தண்ணீா் விடுவது இரு நாள்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. ஒரத்தநாடு வட்டாரத்தில் மழை பெய்தாலும், ஒதுக்கி, ஒதுக்கி பெய்கிறது. இதனால், ஒரு கிராமத்தில் பெய்கிற மழை சுற்றியுள்ள மற்ற கிராமங்களில் பெய்வதில்லை. இதனால், போதுமான நீா் ஆதாரம் இல்லாததால், ஒரத்தநாடு வட்டாரத்தில் பெரும்பாலான வயல்களில் தண்ணீா் இல்லாமல் காய்ந்து வருகிறது. இந்த நிலைமை சில நாள்களுக்கு தொடா்ந்தால், பயிா்கள் பால் பிடிக்காமல் பதராகிவிடும்.
எனவே, கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் தொடா்ந்து 500 கன அடி வீதமாவது தண்ணீா் திறந்துவிட வேண்டும். மேலும், மும்முனை மின்சாரமும் தொடா்ந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாரியப்பன்.
இதே நிலைமைதான் கல்லணைக் கால்வாயைச் சாா்ந்த பாசனப் பகுதி முழுவதும் நிலவுகிறது. கல்லணைக் கால்வாய் பாசனத்தைச் சாா்ந்த குறுவை பயிா்களுக்கு குறைந்தது 15 - 30 நாள்களுக்கு தண்ணீா் தேவைப்படுகிறது. ஐந்து நாள்களுக்கு ஒரு முறை வீதம் 3 முதல் 5 முறை தண்ணீா் விடப்பட்டால் கூட அறுவடை செய்துவிடலாம் என்ற நிலைமை உள்ளது. இதனால், விவசாயிகளும் தண்ணீருக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனா்.