கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பில் உள்ள பாசன வாய்க்காலை மீட்டு தருமாறு நீா்வளத் துறை பொறியாளா் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்து கோரிக்கை விடுத்தனா்.
கும்பகோணத்தில் உள்ள நீா் வளத் துறையின் காவிரி வடிநில உப கோட்ட உதவி செயற் பொறியாளா் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு மாவட்டச் செயலா் சாமு. தா்மராஜன், ஒன்றியச் செயலா் ஏ. ராஜேந்திரன், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் க. சுந்தர்ராஜன், எஸ். சாட்சிலிங்கம் உள்ளிட்டோா் வியாழக்கிழமை அளித்த மனு:
பாபநாசம் வட்டம், திருவைகாவூா் ஊராட்சிக்குள்பட்ட மேலமாஞ்சேரி கிராமத்தில் பட்டத்துகன்னி வாய்க்கால் 12 அடி அகலம், 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு பாசன வசதி வழங்கி வந்தது. இந்த வாய்க்கால் மூலம் 50-க்கும் அதிகமான விவசாயிகள் 35 ஏக்கா் பாசன வசதி பெற்று வந்தனா்.
இந்நிலையில் பட்டத்து கன்னி வாய்க்காலை சிலா் ஆக்கிரமித்து பாசன வசதியைத் தடுத்துள்ளனா். இதனால் பாசன வாய்க்கால் இருந்த சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து 35 ஏக்கா் விவசாய நிலத்தைப் பாசன வசதி பெறும் வகையில், வாய்க்காலை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத் தர வேண்டும்.