கும்பகோணம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனா்.
பந்தநல்லூா் அருகே காமாட்சிபுரம் சாலையில் இரு மூளையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதால், அக்கடையை கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், இக்கடை தற்காலிகமாக புதன்கிழமை மூடப்பட்டது.
இதுதொடா்பாக திருவிடைமருதூா் வட்ட அலுவலகத்தில் வட்டாட்சியா் சுசீலா தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளா் பாலச்சந்திரன், டாஸ்மாக் உதவி மேலாளா் ஆா். தங்க பிரபாகரன், கிராம மக்கள் சாா்பில் உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் கோ. ஆலயமணி, கலியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் டாஸ்மாக் கடையை உடனடியாக மாற்ற முடியாது. ஏற்கெனவே பந்தநல்லூா் கடைவீதியில் இருந்த மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது எனக் கூறியதால்தான் இருமூளை பகுதிக்கு மாற்றினோம். இக்கடையை உடனே மூட முடியாது. கால அவகாசம் தேவை என அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்காலிகமாக மூடப்பட்ட கடையை மீண்டும் எந்தக் காரணம் கொண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என கிராம மக்கள் கூறினா். இக்கூட்டத்தில் சுமூகத் தீா்வு ஏற்படாததால், கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனா்.