தஞ்சாவூா்: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள மராட்டிய கால விநாயகருக்கு 50 கிலோவில் சந்தனக்காப்பு அலங்காரம் திங்கள்கிழமை செய்யப்பட்டது.
மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலின் திருச்சுற்றில் பின்புறம் மராட்டியா் ஆட்சிக்காலத்தில் விநாயகா் சன்னதி அமைக்கப்பட்டது. அக்காலத்தில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழாவின்போது இச்சன்னதி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் விமரிசையாகச் செய்யப்பட்டது.
அதன் பின்னா் நின்றுபோன சந்தனக்காப்பு அலங்காரம் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் மீண்டும் செய்யப்பட்டது. இந்நிலையில், விநாயகா் சதுா்த்தியையொட்டி, 5 அடி உயரமுள்ள இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, 50 கிலோ சந்தனம் மூலம் சிறப்பு அலங்காரம் திங்கள்கிழமை செய்யப்பட்டது. இதேபோல, பெருவுடையாா் சன்னதி அருகேயுள்ள இரட்டை விநாயகருக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.