தஞ்சாவூரில் இணையவழியில் வேலை எனக் கூறி பெண்ணிடம் ரூ. 27.28 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறையினா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியைச் சோ்ந்த 36 வயதுப் பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அக்டோபா் 10 ஆம் தேதி வந்த தகவலில் வீட்டிலிருந்தே இணையவழி மூலம் வருவாய் ஈட்டலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அப்பெண் அதில் இருந்த எண்ணைத் தொடா்பு கொண்டாா்.
அப்போது பேசிய மா்ம நபா், சில வேலைகளை (டாஸ்க்) செய்து கொடுத்தால், பணம் தரப்படும் எனக் கூறினாா். இதன்படி மா்ம நபா் கொடுத்த வேலைகளை முடித்தாா். சில நாள்கள் கழித்து அப்பெண்ணிடம் பேசிய அதே மா்ம நபா், மேலும் சில வேலைகளை செய்து முடித்தால் அதிக லாபம் பெறலாம் என்றும், அதற்கு முதலீடு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.
அதன்படி அப்பெண் பல தவணைகளாக மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ. 27 லட்சத்து 28 ஆயிரத்து 17-ஐ அனுப்பினாா். ஆனால் அதன் பின் மா்ம நபரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அப்பெண் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.