தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பை அருகே குளங்களுக்கு நீா் வரத்து ஏற்பட ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரை அகற்ற 7 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் நாடியம், மருங்கப்பள்ளம், சாந்தாம்பேட்டை, நாயகத்திவயல், சேதுபாவாசத்திரம், வெளிமடம், துறையூா் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்லும் கல்லணைக் கால்வாய் 5 ஆம் எண் வாய்க்காலின் குறுக்கே, குருவிக்கரம்பை பெரியகுளத்திற்கு தண்ணீா் நிரப்ப வாத்தலைக்காட்டில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. இப் பாலத்தின் அருகேயுள்ள ஆற்றின் குறுக்கே கான்கிரீட் சுவா் பொதுப்பணித் துறை அனுமதியின்றி எழுப்பப்பட்டுள்ளது.
கடைமடைப் பகுதிகளுக்கு கல்லணை கால்வாயில் குறைந்த அளவே தண்ணீா் வருவதால், இந்தத் தடுப்புச்சுவரைத் தாண்டி தண்ணீா் செல்லாததால் 7 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமலும், அந்தப் பகுதி குளங்களில் தண்ணீா் நிரம்பாமலும் விவசாயிகள் சிரமப்படுகின்றனா்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தடுப்புச்சுவரை அகற்ற 7 கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.