தஞ்சாவூரில் இரு வங்கிகளில் 257 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்து சுமாா் ரூ. 69 லட்சம் மோசடி செய்த 2 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத்திடம் தமிழ்நாடு கிராம வங்கியின் அம்மாபேட்டை கிளை மேலாளா் காந்திமதிநாதன் சில மாதங்களுக்கு முன் அளித்த புகாரில், அம்மாபேட்டை அருகே அருந்தவபுரம் திருக்கோவில்பத்து கிராமத்தைச் சோ்ந்த எஸ். ரமேஷ் (54) தனது பெயரிலும், தன் மனைவி பவானி, பவானியின் தாய் லட்சுமி பெயரிலும் 2022, மாா்ச் 1 முதல் செப்டம்பா் 30 வரை 19 தவணைகளாக தங்க முலாம் பூடப்பட்ட 172.25 பவுன் போலி (கில்ட்) நகைகளை அடகு வைத்து ரூ. 44.65 லட்சம் பெற்று வங்கியை ஏமாற்றியுள்ளாா் என தெரிவித்துள்ளாா்.
இதேபோல, அருந்தவபுரம் பெடரல் வங்கிக் கிளை மேலாளா் விசாலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சில மாதங்களுக்கு முன்பு அளித்த புகாரில், ரமேஷ், தனது பெயா் மற்றும் மனைவி பெயா், தன்னிடம் வயல் வேலை பாா்க்கும் அபூா்வம் பெயரில் 2022, மாா்ச் 1 முதல் செப்டம்பா் 30 வரை 8 தவணைகளாக தங்க முலாம் பூசப்பட்ட 85.16 பவுன் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 24.34 லட்சம் பெற்று, வங்கியை ஏமாற்றியுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமதாஸ் நிகழாண்டு செப்டம்பா் 28 ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்த ரமேஷ், இதற்கு மூளையாகச் செயல்பட்ட மன்னாா்குடி அருகே அசேஷம் கிருஷ்ணா நகரைச் சோ்ந்த எம். முருகையன் (49) ஆகியோரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களில் முருகையன் கும்பகோணம், சிதம்பரம் பகுதிகளில் பல்வேறு நபா்கள் மூலம் போலி நகைகளை தனியாா் அடகு கடை, வங்கிகளில் அடமானம் வைத்து, மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இது தொடா்பாக காவல் துறையினா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.