கும்பகோணம்: கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், சென்னை ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 146 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 36 ஆயிரத்து 271 மதிப்பில் மூன்று சக்கர வண்டிகள், சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகள், செயற்கை கால், கைத்தடி, மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் வழங்கினாா்.
நிகழ்வில், கும்பகோணம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் தி. கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வ. சீனிவாசன், மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி தாளாளா் ஆா். வாசுதேவன், செயலா் லோக. சந்திரபிரபு, ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவன அலுவலா்கள் அரசு, ஹரிமதி, கல்யாணகுமாா், மஞ்சுநாத், ஆதித்யா, ஒன்றியக் குழு உறுப்பினா் தங்க. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.