தஞ்சாவூர்

மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் நலிவடையும் கயிறு தொழில்சாலைகள்!

DIN

 தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் கயிறு தொழில் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.

பேராவூரணி வட்டத்தில் நாட்டாணிக்கோட்டை, பூக்கொல்லை, ரெட்டவயல், வாத்தலைக்காடு, குருவிக்கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கயிறு தொழில்சாலைகள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள கயிறு தொழில்சாலைகளுக்குத் தேவையான மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை என தொழில்சாலை உரிமையாளா்கள் குற்றம்சாட்டுகின்றனா். மேலும் குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரம் வழங்கப்படுவதால் இயந்திரங்கள் அடிக்கடி  பழுதடைந்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றனவாம். இதுகுறித்து மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கயிறு தொழில்சாலை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தொழில்சாலை உரிமையாளரும், பேரூராட்சி முன்னாள் வாா்டு உறுப்பினருமான கே.பி. குமணன் மேலும் கூறியது:

2018-இல் வீசிய கஜா புயலால் இப்பகுதி கயிறு தொழில்சாலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. சுமாா் 500-க்கும் மேற்பட்ட கயிறு தொழில்சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில், வங்கிக் கடன் பெற்று, புனரமைத்து கயிறு தொழில்சாலைகளை இயக்கி வருகிறோம். கிராமப்பகுதிகளில் குறித்த நேரத்திற்கு உயா் அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதில்லை. மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக தொழில் பாதிப்பும், தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். தற்போது நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது - நிறுத்தப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனால் 24 மணிநேரமும் தொழிலாளா்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால், இரவுநேரங்களில் பெண் தொழிலாளா்கள் வேலை செய்யும் இடத்தில் தங்குவதிலும், வீடு திரும்புவதிலும் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கும் நிலை உள்ளது. 

மின்சாரம் வரும் நேரம் முறைப்படுத்தப்படாததால், தொழிலாளா்களை வேலைக்கு அழைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தொழிலாளா்கள் வேறு வேலை தேடி வெளியில் சென்று விட்டனா். 

முறையான மின் வசதி இல்லாத காரணத்தால் கயிறு தொழில் நலிவடைந்துள்ளது. பலரும் தொழிலைக் கைவிட்டு சென்றுள்ளனா். மும்முனை மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரமாக வருவதால் இயந்திரங்கள், மோட்டாா்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. இதனால் பேராவூரணி பகுதியின் அடையாளமாகத் திகழும் கயிறு தொழில்சாலை பணிகள் முற்றிலுமாக முடங்கி வருகிறது. இதுகுறித்து மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT