அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 1 முதல் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்தது.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழ் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க சட்டம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியம், விரிவான பயிா்க் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 1 முதல் 15 ஆம் தேதிக்குள் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்துவது,
நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் கோரிக்கை மனுவை ஜூன் 16 முதல் 20 ஆம் தேதி வரை கொடுப்பது, கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மாநாடுகளை ஜூலை மாதம் நடத்துவது, காா்ப்பரேட்டுகளுக்கு சொத்துகளைத் தாரை வாா்ப்பதைக் கண்டித்தும், விவசாய தொழிலாளா்களின் நலன் காக்க மற்ற அமைப்புகளுடன் இணைந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி தா்னா போராட்டமும் நடத்துவது,
லக்கிம்பூா் கேரி படுகொலை நாளான அக். 3 ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களிலும் அகில இந்திய தியாகிகள் நாளாகக் கடைப்பிடிப்பது, சென்னையில் நவம்பா் 26 முதல் 3 நாள் தொடா் போராட்டம் நடத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா்கள் சாமி. நடராஜன், பி.எஸ். மாசிலாமணி, முன்னாள் எம்எல்ஏ எஸ். குணசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், நிா்வாகிகள் சந்திரமோகன், அமிா்தலிங்கம், செல்வராஜ், போஸ், மேரி லில்லி பாய், சு. பழனிராஜன், இரா. அருணாசலம், அருண்சோரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.