தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் ஆற்றுப்பால சாலையை சீரமைக்கக் கோரிக்கை

23rd May 2023 02:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில், பழுதடைந்து சரிந்து விழுந்துள்ள  சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில், அய்யம்பேட்டை - கணபதியக்ரஹாரம் இணைப்பு சாலையின் வழியே செல்லும் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தப் பாலத்தின் வழியாக சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனா். இந்நிலையில் இந்தப் பாலம் பழுதடைந்ததால் அதன் அருகே சுமாா்  ரூ. 3. 20 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும் பொதுமக்களின் பயன்பாட்டில் பழைய பாலம் இருந்துவந்த நிலையில், பழைய பாலத்தை இணைக்கும் வடக்குப் பகுதி சாலை ஒருபுறமாக சரிந்து விழுந்தது. இதனால் பாலத்தை கடந்துசெல்லும் வழி துண்டிக்கப்பட்டது. இதனால் அய்யம்பேட்டையிலிருந்து கணபதியக்ரஹாரம் செல்வதற்கு 10 கி.மீட்டா் சுற்றிச்செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் அனைத்துத் தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகத்தினா், உடனடியாக குடமுருட்டி ஆற்றுப் பாலத்தின் வடக்குபுற இணைப்புச்  சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு சீரமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்துள்ளனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT