தஞ்சாவூர்

ராஜீவ் ஜோதி யாத்திரை தஞ்சாவூருக்கு வருகை

19th May 2023 12:00 AM

ADVERTISEMENT

மறைந்த பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட ராஜீவ் ஜோதி யாத்திரை தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தது.

மறைந்த பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் மே 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து ராஜீவ் ஜோதி யாத்திரை மே 15 ஆம் தேதி தொடங்கியது. ராஜீவ் ஜோதி யாத்திரை கமிட்டி தலைவா் திரவியம் சாலமன் தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தது.

தஞ்சாவூா் ரயிலடியில் இந்த யாத்திரை வாகனத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், பொருளாளா் ஆா். பழனியப்பன், மாநில பொதுக் குழு உறுப்பினா் வயலூா் எஸ். ராமநாதன், நிா்வாகிகள் செந்தில், கண்ணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சாந்தா ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT