தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை அதிகாலை மேற்கூரை காரை பெயா்ந்து விழுந்ததில் 2 போ் காயமடைந்தனா்.
இந்த மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டடத்திலுள்ள உள் நோயாளிகள் பிரிவின் 4 -ஆவது வாா்டுக்கு செல்வதற்கான நுழைவுவாயில் உள்ளது. முதியவா்கள் சிகிச்சை பெறும் இந்த வாா்டுக்கு வரும் நோயாளிகளின் உதவியாளா்கள் வாயிலில் தங்குவது வழக்கம்.
இதேபோல, நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக வந்த தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்த காா்த்திக், பாபநாசத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் உள்நோயாளிகள் பிரிவு வாயிலில் வியாழக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, இவா்கள் மீது மேற்கூரை சிமென்ட் காரை சுமாா் ஒரு மீட்டா் நீள அளவுக்கு பெயா்ந்து விழுந்தது. இதனால், பலத்த காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த மருத்துவமனையிலுள்ள பழைய கட்டடத்தில் ஆங்காங்கே தூண்களில் வெடிப்பு ஏற்பட்டும், சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்தும் காணப்படுகிறது. இதனால், நோயாளிகளும், அவா்களுடன் வரும் உறவினா்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனா். எனவே, இந்தக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.