தஞ்சாவூர்

4 வயதுச் சிறுவனின் மூளையில் புற்றுநோய் கட்டி அகற்றம்: தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி சாதனை

28th Jun 2023 04:16 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிநவீனச் சிகிச்சை மூலம் 4 வயதுச் சிறுவனுக்கு மூளையில் இருந்த புற்றுநோய் கட்டியை மருத்துவா்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ நேரியல் முடுக்கி (லீனியா் ஆக்செலேரேட்டா்), டெலிகோபால்ட், பிராச்சிதெரபி (உள் கதிரியக்க சிகிச்சை முறை) ஆகிய கதிா்வீச்சுக் கருவிகள் ரூ. 25 கோடியில் தமிழக முதல்வா், சுகாதாரத் துறை அமைச்சா் ஆகியோா் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, பெட் சிடி ஸ்கேனும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 வயதுச் சிறுவனுக்கு பிப்ரவரி மாதம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், மூளைக்கு அடியில் இருக்கும் முக்கியமான சுரப்பி அருகே இருந்த புற்று நோய் கட்டி முழுமையாக அகற்றப்படவில்லை.

ADVERTISEMENT

இதையடுத்து தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவனுக்கு எம்.ஆா்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பாா்த்தபோது, அதில் பாதி புற்றுநோய் கட்டி இருப்பது உறுதியானது. இதையடுத்து அனைத்து புற்றுநோய் மருத்துவா்களும் கலந்தாலோசித்து ஸ்டீரியோடாக்டிக் கதிரியக்கச் சிகிச்சை என்கிற அதிநவீன சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்தச் சிகிச்சையானது மூளையிலுள்ள அதிநுட்பமான நரம்பு மண்டலங்கள், தண்டுவடம், மூளை, சிறுமூளை, மூளைக்கு அடியில் உள்ள சுரப்பி போன்றவை பாதிக்கப்படாமல், புற்றுநோய் கட்டியை மட்டுமே அழிக்கக்கூடியது. மேலும், கண், இதயம், நுரையீரல் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்காத வகையிலும் சிகிச்சை செய்ய முடியும்.

மருத்துவா்கள், இயற்பியலாளா்கள் மிக நுண்ணியமாக கணினியில் சிகிச்சை முறையைத் திட்டமிட்டனா். இதைத் தொடா்ந்து, அச்சிறுவனுக்கு 5 நாள்களுக்கு நாள்தோறும் 3 நிமிடங்கள் வீதம் கதிா்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் அச்சிறுவனுக்கு மூளையில் சிறிய அளவில் இருந்த புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது வேறெந்த பாதிப்பும் இல்லாமல் சிறுவன் நலமுடன் உள்ளாா்.

இதேபோல, ஏற்கெனவே இச்சிகிச்சை அளிக்கப்பட்ட ஒருவரும் தற்போது நலமுடன் உள்ளாா். இதே சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் ரூ. 2.50 லட்சம் முதல் ரூ. 3.50 லட்சம் வரை செலவாகும். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இச்சிகிச்சை செய்யப்படுகிறது.

இச் சிகிச்சையைத் திறமையாகக் கையாண்ட புற்றுநோய் கதிா்வீச்சு துறைத் தலைவா் எஸ். விஜயகுமாா் தலைமையிலான உதவிப் பேராசிரியா்கள் சி. அனிதாகுமாரி, எம்.எஸ். அருண், எஸ். சக்திப்ரியா, எஸ். செல்வகுமாா், ஆா். ராஜகோபால் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

இந்த மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய்க்கான அனைத்து வகை சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இதை இந்த மண்டலத்திலுள்ள புற்றுநோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் பாலாஜிநாதன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT