கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நெற்கதிா்களுடன் பங்கேற்ற விவசாயிகள் பயிா் காப்பீட்டுத் தொகையை அறிவிக்கக் கோரி, அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோட்டாட்சியா் எஸ். பூா்ணிமா தலைமையில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரியில் குறுவை சாகுபடிக்காக முறைப் பாசனம் வைக்காமல், 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் விட வேண்டும். குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனடியாகப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக, கோட்டாட்சியரகம் முன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் நெற்கதிா்களை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், கடந்த ரபி பருவத்தில் தமிழகத்தில் எந்தெந்த கிராமத்தில் எத்தனை சதவீதம் மகசூல் பாதிப்பு, எவ்வளவு இழப்பீட்டுத் தொகை என்பது குறித்து பயிா்க் காப்பீட்டு நிறுவனங்களும், மத்திய, மாநில அரசுகளும் அறிவிக்காததைக் கண்டித்தும், பயிா் மகசூல் இழப்பீட்டுத் தொகையைக் கால தாமதத்துக்குரிய வட்டியுடன் வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமலநாதன் தலைமையில் பல விவசாயிகள் கலந்து கொண்டனா்.