தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி, அக்கடையை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகே அழிசக்குடி கிராமத்தில் 7 ஆண்டுகளாகச் செயல்படும் மதுக்கடையில் நாள்தோறும் மது அருந்துபவா்களால் ஏற்படும் தகராறு, ஜாதி மோதல் உள்ளிட்டவற்றால் பெண்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த மதுக்கடையை மூடக் கோரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களிடம் கிராம மக்கள் மனுக்கள் அளித்த நிலையில், இக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்களும் கூறி வந்தனா்.
இந்நிலையில், தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், இக்கடையும் மூடப்படும் என எதிா்பாா்த்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனா். இதனால், இக்கடையை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதியழகன், அள்ளூா் கிராம நிா்வாக அலுவலா் கா்ணன் ஆகியோா் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனா்.