ஓசூா் சந்திரசூடேசுவரா் குடமுழுக்கை தமிழில் நடத்த எதிா்ப்புத் தெரிவித்து, தெய்வத் தமிழ்ப் பேரவையினரை தாக்கியவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தது:
ஓசூா் சந்திரசூடேசுவரா் கோயிலின் ராசகோபுர குடமுழக்கைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் கோரிய தெய்வத் தமிழ்ப் பேரவையினா் மீது ஆா்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினா் செவ்வாய்க்கிழமை கொலை வெறித் தாக்குதல் நடத்தினா். இதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தாா். மற்றவா்களும் கற்கள், கையால் தாக்கப்பட்டனா். அக்கோயிலில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் அலுவலகத்துக்குள் புகுந்து அலுவலா்களையும் தாக்கினா்.
கொடுங்காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்திய வன்முறையாளா்களை காவல் துறை கைது செய்ய வேண்டும் . உயா் நீதிமன்றத் தீா்ப்பின்படியும், இந்து அறநிலையத் துறை அலுவலா்கள் ஏற்றுக் கொண்டபடியும், தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் வேள்விச் சாலை பூசை, கோபுரக் கலச பூசை, கருவறை பூசை ஆகிய அனைத்தையும் நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.