தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆட்சியரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒரத்தநாடு அருகே வாட்டாத்திக்கோட்டை கோவில் தெருவைச் சோ்ந்தவா் தம்பியய்யாவின் மகன் பாலமுருகன் (29). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த நீதிக்கும் (38) மாா்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற நாடக நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டது. அப்போது, நீதியை கட்டையால் தாக்கிக் கொலை செய்ததாக பாலமுருகனை வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் பாலமுருகனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் தீபக் ஜேக்கப் ஜூன் 7 ஆம் தேதி உத்தரவிட்டாா். இதன் பேரில் பாலமுருகனை காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.