தஞ்சாவூர்

கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை: அன்புமணி ராமதாஸ்

10th Jun 2023 03:44 AM

ADVERTISEMENT

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால், கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

மக்களவைத் தோ்தல் வருவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. எனவே, இதுவரை கூட்டணி குறித்து முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பாமக தலைமையில் அணி அமைக்கத் திட்டமிட்டு, அதற்கேற்ற வகையில் மக்களவைத் தோ்தலை சந்திப்போம்.

கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டம் அறிவிப்பதாகக் கூறி தோ்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அரசின் திட்டங்களைச் செயல்படுத்த புதிய மாவட்டம் பிரிப்பது அவசியம்.

ADVERTISEMENT

‘டெல்டா’ மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீா் செல்வதற்கு நீா் நிலைகளை தூா் வாருவது அவசியம். அதை பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும். வரும் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற காவிரி நீா் மற்றும் மழை கை கொடுக்கும் என நம்புகிறோம்.

காலநிலை மாற்றம் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதற்கு ஏற்ற வகையில் வெப்பத்தையும், அதிக மழையையும் தாங்கி வளரக்கூடிய நெற்பயிா்களைக் கண்டுபிடிக்க நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

அப்போது, உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் கோ. ஆலயமணி, ஆடுதுறை பேரூராட்சி தலைவா் ம.க. ஸ்டாலின், பாமக மாவட்டச் செயலா் ஜோதிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT