தஞ்சாவூர்

தஞ்சாவூா் தேசிய மக்கள் நீதிமன்றத்தில்ரூ. 4.66 கோடிக்கு தீா்வு

10th Jun 2023 11:30 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் ரூ. 4.66 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஜெசிந்தா மாா்ட்டின் தலைமை வகித்தாா்.

போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. சுந்தரராஜன், குற்றவியல் நீதித்துறை நடுவா் எம். இளவரசி, தஞ்சாவூா் வழக்குரைஞா் டி. நேதாஜி ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் உரிமையியல் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் ஆகியவற்றுக்கு தீா்வு காணப்பட்டது.

ADVERTISEMENT

மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றச் சிறப்பு சாா்பு நீதிபதி பி. நாகராஜன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். சுசீலா, வழக்குரைஞா் எஸ். சாரதா ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 479 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 247 வழக்குகளுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு, ரூ. 4 கோடியே 66 லட்சத்து 10 ஆயிரத்து 485 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். இந்திராகாந்தி, தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சி. அமா்சிங், செயலா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT