தஞ்சாவூர்

காவல் துறையினரைக் கண்டித்து நகைக் கடை வியாபாரிகள் கடையடைப்பு

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் விசாரணை என்ற பெயரில் காவல் துறையினா் அச்சுறுத்தி வருவதாகக் கண்டித்து, நகைக் கடை வியாபாரிகள் புதன்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் கீழ அலங்கத்திலுள்ள மதுக்கூடத்தில் மே 21 ஆம் தேதி மது அருந்தி 2 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், சயனைடு கலந்து மது அருந்தியதால், இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது.

ஆனால், சயனைடு கலந்த மது எப்படி வந்தது?, சயனைடு எப்படிக் கிடைத்தது என்பது புதிராகவே இருந்து வருகிறது. இதனிடையே, நகைகளை மெருகூட்டுவதற்காகப் பொற்கொல்லா்கள் சயனைடை பயன்படுத்துவது தெரிய வந்ததால், அவா்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, விசாரணை என்ற பெயரில் நகைக் கடை வியாபாரிகளையும், நகை தொழிலாளா்களையும் காவல் துறையினா் நாள்தோறும் அச்சுறுத்தி வருவதாகக் கண்டித்து தஞ்சாவூரில் புதன்கிழமை ஏறத்தாழ 200 நகைக் கடைகள், நகைகள் மெருகூட்டும் கடைகளை அடைத்தனா். மேலும், தஞ்சாவூா் அய்யங்கடைத் தெருவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்த நகைக் கடை சங்கத் தலைவா் எஸ். வாசுதேவன் தெரிவித்தது:

விலை மதிப்பில்லாத சயனைடை நாங்கள் வெளியில் யாருக்கும் எப்போதும் கொடுக்க மாட்டோம்.

இந்நிலையில், காவல் துறையினா் தொடா்ந்து தொல்லை கொடுத்து வருவதால், தொழில் பாதிக்கிறது. தொழிலாளா்களால் தொடா்ந்து வேலை செய்ய முடியாததால், வாடிக்கையாளா்களுக்கு குறித்த நேரத்தில் நகைகளை மெருகூட்டிக் கொடுக்க முடியவில்லை. இதனால், பல்வேறு பிரச்னைகள் நிலவுவதால், இப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இப்போராட்டம் வியாழக்கிழமையும் தொடரும் என்றாா் வாசுதேவன்.

இந்தப் போராட்டத்தில் நகை கடை சங்கச் செயலா் சேகா், பத்தா் சங்க நகரச் செயலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT