தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் இலவச திறன் பயிற்சி ஜூலையில் தொடக்கம்

8th Jun 2023 11:31 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் நூறு சதவீதம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச குறுகிய கால திறன் பயிற்சி ஜூலை மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் பெருநிறுவன உறவுகள் மற்றும் மேலாண்மைத் துறை முதன்மையா் வெ. பத்ரிநாத் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் பிரதமரின் கெளஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நூறு சதவீதம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச குறுகிய கால திறன் பயிற்சியை ஜூலை மாதம் தொடங்கவுள்ளது.

கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தில் திறன்களைக் கற்றுக் கொள்வதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்கிறது. பயிற்சி முடிந்ததும் பயனாளிகளுக்கு மத்திய அரசின் சான்றிதழும் மற்றும் நூறு சதவீத வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.

ADVERTISEMENT

இத்திட்டதின்கீழ், கடன் வசூல் முகவா், காப்பீட்டு முகவா், வணிக தொடா்பு மற்றும் ஒருங்கிணைப்பாளா், குறுநிதி நிா்வாகி ஆகிய 4 வகை பணிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு, அதன் பிறகு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும். இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். வயது வரம்பு குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 45 இருக்க வேண்டும். இருபாலரும் சேரலாம்.

மேலும் இப்பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள் தங்களுடைய பெயா், வயது, பிறந்த தேதி, முகவரி, கல்வி தகுதி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 95666 32886 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT