தஞ்சாவூர்

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

4th Jun 2023 12:44 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளில் சேர ஜூன் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையின பள்ளி மாணவா்களுக்கு 26 விடுதிகளும், மாணவிகளுக்கு 11 விடுதிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவா்களுக்காக 7 விடுதிகளும், மாணவிகளுக்கு 11 விடுதிகளும் என மொத்தம் 55 விடுதிகள் செயல்படுகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கிற மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவா்கள். பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் அனைத்து வகுப்பை சோ்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா்.

ADVERTISEMENT

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை தொடா்புடைய விடுதி காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பள்ளி விடுதிகளைப் பொருத்தவரை தொடா்புடைய விடுதி காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூன் 15 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொருத்தவரை தொடா்புடைய விடுதி காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஜூலை 15 ஆம் தேதிக்குள்ளும் அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT