தஞ்சாவூர்

காவிரியைக் காக்க மக்கள் போராட்டம் தேவை

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

காவிரியைக் காக்க மக்கள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை மேலும் தெரிவித்தது:

கா்நாடக மாநிலத் துணை முதல்வா் டி.கே. சிவக்குமாா் மே 30 ஆம் தேதி பாசனத் துறை அலுவலா்களுடன் கலந்தாய்வு செய்து, மேக்கேதாட்டில் விரைவில் அணை கட்டும் பணிகள் தொடங்கும் என்றும், இதற்காக ரூ. ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தாா்.

இந்த அறிவிப்புக்கு எதிா்வினை ஆற்றி தமிழ்நாடு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் மே 31 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அண்டை மாநிலத்தை உரசிப் பாா்க்கிற காரியத்தை சிவக்குமாா் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. மேக்கேதாட்டு பற்றிய முழு விவரத்தை இன்னும் அலுவலா்கள் அவருக்குச் சொல்லி இருக்க மாட்டாா்கள் எனக் கருதுகிறேன். மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவது வரவேற்கத்தக்கதல்ல என பாசமழை பொழிந்துள்ளாா்.

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றத்தில் இது தொடா்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. மத்திய அரசு தன் பக்கம் இருக்கும் என்ற உறுதியும், திமுக ஆட்சி பெரிய அளவு எதிா்ப்புக் காட்டாது என்ற நம்பிக்கையும் கா்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டு மக்கள் காவிரியைக் காக்க கட்சி கடந்து ஒருங்கிணைந்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT