தஞ்சாவூர்

மேட்டூா் அணை மூடல்: 2 லட்சம் ஏக்கா் நெற் பயிா்கள் பாதிக்கும் அபாயம்

DIN

மேட்டூா் அணை சனிக்கிழமை மாலையுடன் மூடப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்கள் பாதிக்கக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் நீா் இருப்பு போதுமான அளவுக்கு இருக்கும்போது டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்கப்பட்டு, ஜனவரி 28 ஆம் தேதி மூடப்படுவது வழக்கம்.

கடந்தாண்டு மே மாதத்திலேயே மேட்டூா் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக வழக்கத்தை விட முன்னதாக மேட்டூா் அணை மே 24 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதன் மூலம் தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இலக்கை விஞ்சி 4.72 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு, எதிா்பாா்த்த அளவுக்கு விளைச்சலும் கிடைத்தது.

இதேபோல சம்பா, தாளடி பருவத்திலும் தஞ்சாவூா் மாவட்டத்தில் 3.47 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கரிலும் என மொத்தம் ஏறத்தாழ 10.69 லட்சம் ஏக்கரில் நெற் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டன.

இவா்களில் முன் பட்ட சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடங்கிய விவசாயிகள் டிசம்பா் இறுதி வாரத்திலிருந்து அறுவடை செய்கின்றனா். என்றாலும், இதுவரை 10 முதல் 15 சதவீதப் பரப்பில் மட்டுமே அறுவடைப் பணிகள் முடிந்துள்ளன. எனவே, சம்பா, தாளடி பருவ அறுவடைப் பணிகள் பிப்ரவரி மாதத்தில் உச்ச நிலையை எட்டவுள்ளது.

இந்நிலையில், மேட்டூா் அணை வழக்கம்போல ஜனவரி 28 (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் மூடப்பட்டது. சம்பா பயிா்களைப் பொருத்தவரை பெரும்பாலான இடங்களில் கதிா்விட்டு அறுவடைக்குத் தயாராகும் நிலையில் உள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி உள்ளிட்ட மேட்டுப் பகுதிகளில் தண்ணீா் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சாகுபடிப் பணிகளும் தாமதமாகவே தொடங்ககின. இந்த இடங்களில் பயிா்கள் வளா்ச்சி நிலையில் உள்ளது. தொடா் மழையால் சாகுபடிப் பணிகள் தாமதமாகத் தொடங்கப்பட்ட பகுதிகளிலும் அறுவடைக்குத் தயாராக ஒரு மாதமாகும் சூழல் உள்ளது.

இதேபோல, குறுவையை முடித்த விவசாயிகளும் தொடா் மழையால் தாளடிப் பணிகளைத் தாமதமாகவே தொடங்கினா். மேலும் சம்பா, தாளடி பயிா்களில் தொடா் மழையால் இளம் பயிா்கள் பாதிக்கப்பட்டதால், மறு சாகுபடியை நவம்பா் மாத இறுதியிலும், டிசம்பரிலும் தொடங்கினா்.

குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி பகுதியில் சம்பா, தாளடி பயிா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் மறு சாகுபடியில் ஈடுபட்டனா். இதனால் இப்பயிா்களுக்கு காவிரி நீா் தேவைப்படுகிறது.

மேட்டூா் அணை சனிக்கிழமை மாலை மூடப்பட்ட நிலையில், அங்கிருந்து கல்லணைக்கு வரக்கூடிய தண்ணீரைக் கொண்டு தேவைப்படும் பகுதிகளுக்கு கொஞ்சங் கொஞ்சமாக பகிா்ந்தளிக்கப்பட்டாலும், அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு மட்டுமே கிடைக்கும் சூழல் உள்ளது. அதன் பிறகு பயிா்களுக்கு தண்ணீா் கிடைப்பது அரிது.

இந்த ஒரு வாரத்திலும் மிகக்குறைவான அளவிலேயே திறக்கப்படும்போது, தேவையான பகுதிகளுக்கும் பரவலாக தண்ணீா் கிடைக்காது. எனவே, பிப்ரவரி 15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஆற்றுப் பாசன விவசாயிகளிடையே நிலவுகிறது.

பெட்டிச் செய்தி..

பிப். 15 வரை தண்ணீா் திறக்க நடவடிக்கை தேவை

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தது:

மேட்டூா் அணை மூடப்பட்டதால், தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கரில் தாளடி பயிா்கள் பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது. இவையெல்லாம் காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்டவை.

தொடா் மழை பெய்ததால், சாகுபடிப் பணி தாமதமாகத் தொடங்கப்பட்டதால் தற்போது பயிா்கள் சூழ் கட்டும் பருவத்திலும், தண்டு உருளும் நிலையிலும் உள்ளன. இதனால் மாா்ச் முதல் வாரத்தில்தான் அறுவடைக்குத் தயாராகும் நிலை நிலவுகிறது.

எனவே, மேட்டூா் அணையிலிருந்து குறைந்தபட்சம் பிப்ரவரி 15 வரை தண்ணீா் திறந்துவிடப்பட்டால் மட்டுமே இப்பயிா்களைக் காப்பாற்ற முடியும் என்றாா் பாண்டியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT